புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், `இந்திய தண்டனை சட்டம் 1860, குற்றவியல் தண்டனை சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றில் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறைகளின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து உள்துறை விவகாரத்துக்கான நாடாளுமன்ற குழுவின் 111 மற்றும் 128வது அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில், பெயரளவிலான திருத்தங்களாக அல்லாமல், தேவையான திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. தற்போது, 146வது அறிக்கையில், மக்கள் நலன் சார்ந்த, விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.