சோதனை வாழ்விலும், குறை தேடாத நல்லுள்ளமுடையோர் மாற்றுத்திறனாளிகள். அப்படியான இரு உள்ளங்களால் இணைந்த மாற்றுத்திறனாளி தம்பதிதான் குமார் – தமிழ்ச்செல்வி. இந்த இருவரும் காதலித்து கரம்பிடித்தனர். தமிழ்ச்செல்வி இப்போது கர்ப்பிணி. அவருக்கு வாட்ஸ்ஆப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள், நல்உள்ளம் கொண்ட சிலர்.
திருவண்ணமாலை மாவட்டம், போளூர் ஒன்றியத்துக்குட்பட்ட வசூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் மாற்றுத்திறனாளி இளைஞர் குமார். பிறப்பிலேயே ஒரு கை, ஒரு கால் வளர்ச்சியடையாமல் போனதால் ஒரே கை, ஒரே காலுடன் துணிந்து எழுந்து நிற்கிறார். பி.சி.ஏ பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் ஜெராக்ஸ் மெஷின், கணினி மையம் நடத்தி மக்களுக்குத் தேவையான சில ஆவணத் தகவல்களை திரட்டித் தருகிறார். அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அவரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், போளூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளூர் கிராமத்தில் இயங்கி வரும் ஃபீனிக்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் தீபம் ஃபெடரேஷன் சார்பில் அவ்வப்போது நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான எதிர்காலத் திட்டம் குறித்த முகாம்களில், குமாரும் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார். இந்த முகாமில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செங்கம் தாலுகா, நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான தமிழ்ச்செல்வியைப் பார்த்துப் பழகியிருக்கிறார் குமார். ப்ளஸ் டூ முடித்த தமிழ்ச்செல்வி சுயத்தொழில் செய்ய விருப்பப்பட்டு முயன்று வந்திருக்கிறார்.
இருவரின் நட்பும் ஓராண்டுக்கு முன்பு காதலாக மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்ட இருவரும், தங்கள் பெற்றோர்களிடம் முதலில் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு தமிழ்ச்செல்வியின் வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ்ச்செல்வி கடந்த ஆண்டு தன் காதலரை மணமுடித்தார். இவர்களின் திருமணத்தையும் ஃபீனிக்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிதான் நடத்தி வைத்தது. பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில், இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கி நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வி கர்ப்பமடைந்தார். நிறை மாதமான நிலையில், தமிழ்ச்செல்விக்கு வளைகாப்பு நடத்த அவரின் பெற்றோர் வரவில்லை. இதையடுத்து, ஃபீனிக்ஸ் பள்ளி மற்றும் தீபம் ஃபெடரேஷனுடன் இணைந்து ‘அன்னை தெரசா சேவைக்குழு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவும் கைகோத்து, வளைகாப்பு செய்ய முன்வந்தனர். அதன்படி, நேற்றைய தினம் சீமந்தம் நடந்தது.
பட்டுப்புடவை அணிந்து, கை நிறைய வளையல்கள் அணிந்திருந்த தமிழ்ச்செல்விக்கு முகம் நிறைய மஞ்சள் பூசி, குட்டித் தங்கம் எட்டு வைத்து வரும் வருகையை கொண்டாடி மகிழ்ந்தார்கள் அங்கு சூழ்ந்திருந்த பண்பாளர்கள். ஏழு வகை சாதங்களும், எடுக்க எடுக்க குறையாமல் எஞ்சி நிற்க, மாற்றுத்திறனாளி குழந்தைகளை அமரவைத்து பரிமாறினர். ‘வாரிசு என்னும் சீதனம் சுமக்கும் சுந்தரி இவள் வாழும் வீடு சொர்க்கமே!’ என தமிழ்ச்செல்வியையும், குமாரையும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள் அங்கு கூடியிருந்த நல்லுள்ளம் கொண்ட சமூக பற்றாளர்கள்.