கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது!.. ஒன்றிய நிதியமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.  எனினும், அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக நேற்று மக்களவையில் எதிர்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா பொருளாதாரம் சிறப்பான இடத்தில் உள்ளது. இதற்கு மாநில அரசுகள் உதவின. இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைவதற்கோ, நெருக்கடிக்கு உள்ளாவதற்கோ வாய்ப்பு இல்லை. கொரோனா இரண்டாவது அலை, ஒமிக்ரான், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே நாட்டின் பணவீக்கம் உள்ளது. வங்கிகள் மீதான நெருக்கடியும் குறைவாகவே இருக்கிறது. உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று பேசினார். இருந்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்தாண்டில் இருந்தே மந்தநிலைஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தந்த விளக்கம் குறித்து, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறியதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்தாண்டே இந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை’ என்று விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.