கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி, தேனீ, பட்டாம்பூச்சி மற்றும் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட தம்பிக் குதிரை உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18ம் தேதி வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி மலர்க்கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

மலர் கண்காட்சியில் பழமையை நினைவு கூறும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் ஆன மாட்டு வண்டி 75,000 பல்வகை மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 30,000 ரோஜா மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பட்டாம் பூச்சி, தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30,000 பலவண்ண மண்களால் ஆன தேனீ. குழந்தைகள். பெரியவர்களைக் கவரும் வகையில் வில், அம்பு, மற்றும் காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் வடிவம் மற்றும் காதலர் சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இம்மலர் கண்காட்சி ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், சம்பாங்கி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவற்றை மலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர்.

இதுபோல் இந்த ஆண்டு முதன் முறையாக மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரில், தாவரவியல் பெயர், பயன்பாடுகளுடன் மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவற்றையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு அவற்றின் பயன்பாட்டை அறிந்து சென்றனர்.

முன்னதாக செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான வெளியூர் மற்றும் கொல்லிமலை மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை 3ம் தேதி நிறைவு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.