கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரிக்கிறது. உடனடியாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள். ஜனாதிபதி மக்களிடம் வேண்டுகோள்.

கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (02) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

கொவிட் மற்றும் குரங்கம்மை தொற்று நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுத்துள்ள விசேட அறிக்கை பின்வருமாறு :-

“கொவிட்-19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 1731 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 26 கொவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அந்த நிலைமை மே மாதத்தில் 472 நோயாளிகளாக குறைந்துள்ளது. 13 இறப்புகள் பதிவாகின. ஜூன் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 283 ஆக உள்ளது. 3 இறப்புகள். ஆனால் ஜூலை மாதத்தில், கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 1616 ஆக அதிகரித்துள்ளது. 35 இறப்புகள்.

இந்த 35 இறப்புகளில் 28 ஜூலை 18 க்குப் பிறகு நிகழ்ந்துள்ளன. இதைப் பார்க்கும்போது இன்னொரு விடயமும் தெரிகிறது. அதாவது கொவிட் தடுப்பூசியை உடனடியாக வழங்க வேண்டும்.

முதல் கட்டத்தில் 17 மில்லியன் பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இரண்டாவது கட்டத்தில் அது 14 மில்லியனாகக் குறைந்தது. மூன்றாவது கட்டத்தில், 08 மில்லியன் மக்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 04வது கட்டத்தில் 22,623 பேர் மாத்திரமே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர் குறிப்பாக மேல்மாகாணத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது குறைந்துள்ளது.

எனவே, தடுப்பூசி ஏற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது 08 மில்லியன் தடுப்பூசிகள் உள்ளன. இதை அக்டோபர் வரை பயன்படுத்தலாம். அந்த 08 மில்லியன் தடுப்பூசிகளை அக்டோபரில் முடிக்க முடியாது. எனவே, ஒரு பகுதியை வேறு நாட்டிற்கு வழங்க நேரிடும். தடுப்பூசி உங்களுக்காக கொண்டு வரப்பட்டது. எனவே தடுப்பூசி ஏற்றாத அனைவரும் விரைவில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

சுகாதார அமைச்சும் இதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது. அந்த அறிவுரைப்படி அனைவரும் செயல்பட வேண்டும். மேலும், “குரங்கம்மை” தொற்றுநோய் தொடர்பிலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை அது இலங்கைக்கு வரவில்லை. இந்நோய் இலங்கைக்கு வராமல் தடுக்க முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுங்கள். இந்த நாட்டில் கொவிட் தொற்றுநோய்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.