சிங்கப்பூர்:’இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிறப்பு சலுகைகள், கூடுதல் பாதுகாப்பு, அரசு முறையிலான விருந்தோம்பல் ஆகிய எதுவும் வழங்கப்படவில்லை’ என, சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் போராட்டத்திற்கு பயந்து, கடந்த மாதம் மாலத்தீவிற்கு தப்பியோடினார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, தன் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். இந்நிலையில், சிங்கப்பூர் பார்லி.,யில், வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகளை அரசு வழங்குவதில்லை. அதன்படி, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அரசு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அல்லது விருந்தோம்பல் உபசரிப்பு ஆகியவையும் தரப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கூறியதாவது: தகுந்த பயண ஆவணங்கள் உள்ள வெளிநாட்டினரைத் தான், சிங்கப்பூர் அனுமதிக்கிறது. தேசத்திற்கு பாதகமாக இருக்கும் வெளிநாட்டினரை அனுமதிப்பதில்லை. சிங்கப்பூர் வரும் நபரை ஒப்படைக்கும்படி ஒரு நாடு கோரிக்கை விடுத்தால், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அரசு உதவி செய்யும்.சிங்கப்பூர் வழியாகச் செல்வோர், விமான நிலையத்தில் இருக்கும் பட்சத்தில், அவரது குடியேற்ற ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அவர் சிங்கப்பூரில் நுழைந்ததாக கருதப்பட மாட்டார்.
இந்த நடைமுறை, சர்வதேச சட்டப்படி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவரது முந்தைய மற்றும் தற்போதைய அந்தஸ்தை பரிசீலித்து, அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கண்டறியப்பட்டால், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
கோத்தபய ராஜபக்சேவின் குறுகிய கால ‘விசா’ வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வருவோருக்கு, 30 நாட்கள் குறுகிய கால விசா வழங்கப்படுகிறது. விசாவை நீட்டிக்கக் கோரினால், தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement