லண்டன்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை கைது செய்ய உடனே நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜெயரெத்னம் சிங்கப்பூர் நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஏஜி லூசியன் வோங்கிற்கு (ஏஜி லூசியன் வோங் – சிங்கப்பூர் வழக்கறிஞர் ஆவார், இவர் 2017 முதல் சிங்கப்பூரின் ஒன்பதாவது அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார்) கோத்தபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டி, அவரை கைது செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் ராஜபக்சேக்களின் தகுதியற்ற ஆட்சியால், அந்நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் விதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் காரணமாக, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறி, மாலத்தீவில் தஞ்சம அடந்தார். அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். தற்போது சிங்கபூரில் டூரிஸ்ட் விசாவில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜெயரெத்னம் சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞரான (அட்டர்னி ஜெனரல்) ஏஜி லூசியன் வோங்கிற்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் எனவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சவினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் இங்கிலாந்தில் இருப்பதாகவும், கோத்தபய தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களை நேர்காணல் செய்வதற்கு உங்களுக்கு எம்மால் உதவ முடியும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கோத்தபய ராஜபக்சேவிற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.