மும்பை: மகாராஷ்டிராவில் 2007-ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் பத்ரா சால் பகுதியை மேம்படுத்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1,034 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்கு உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்த சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு ராவத்திடம் விசாரணை நடத்தினர். பின்னர் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சஞ்சய் ராவத் கைது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. சிவசேனாவால் அரசியல்ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். சிவசேனா முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்சம் அழுத்தத்தின் கீழ்தான் அதிருப்தி அணிக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார். ஆனந்த் திகே 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதைக் காட்டினார். அரசியல் பழிவாங்கும் போக்கு போல இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கைது செய்யப் பட்ட சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 4-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமலாக்கத் துறையினர் 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 4 நாட்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தின் பெயரில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும், அவரது பெயரில் அடுக்கு மாடி வீடு வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்வப்னா பட்கர் போலீஸில் புகார்
சஞ்சய் ராவத்தின் முன்னாள் உதவியாளர் ஸ்வப்னா பட்கர் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வயதான ஸ்வப்னா பட்கர், மும்பை புறநகர்ப் பகுதியில் கிளினிக் வைத்து, உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனக்கு பாலியல் தொல்லை தருவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், மேலும் ஆடியோ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் ஸ்வப்னா கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் மீது பல்வேறு பிரிவுகளில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.