சீனாவில் பெரிய வெள்ளை சுறாவை நேரலையில் சட்டவிரோதமாக சமைத்து சாப்பிட்ட உணவு பதிவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பிரபலமான உணவு பதிவர்களில் ஒருவரான Tizi என்பவரே வெள்ளை சுறாவை சமைத்து சாப்பிட்டு சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
அவர் வெள்ளை சுறாவை சட்டவிரோதமாக வாங்கியிருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த காணொளியில், இது பார்க்கும் போது கொடூரமாகத் தோன்றலாம், ஆனால் அதன் இறைச்சி உண்மையிலேயே மிகவும் மென்மையானது என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட Tizi ஆறடி கொண்ட வெள்ளை சுறாவை சிச்சுவான் மாகாணத்தில் தென்மேற்கு நகரமான நான்சோங்கில் உள்ள கடல் உணவுக் கடையில் வாங்கியுள்ளார்.
மட்டுமின்றி, இவர் சமைப்பதை காண குவிந்திருந்த மக்கள் மத்தியில் சுறாவை சுத்தம் செய்து, தலையை கொதிக்கும் குழம்பில் வேக வைத்துள்ளார்.
மேலும், அங்கு குவிந்திருந்த பார்வையாளர்களுடன் சமைத்த உணவை பகிர்ந்து கொண்டார்.
ஜூலை 14ம் திகதி பதிவேற்றப்பட்ட அந்த காணொளியானது சீனாவின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த காணொளியானது அவரது கணக்கில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாகாண பொலிசார் விசாரணையை முன்னெடுத்ததாக தகவல் வெளியானது.
பாதுகாக்கப்படும் உயிரினங்களில் வெள்ளை சுறாவும் இடம்பெற்றிருப்பதால், அவரது செயல் சட்டவிரோதம் என வாதிட்டுள்ளனர்.
மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமிருப்பதாக சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.