சென்னை மேடவாக்கம், நெசவாளர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி செல்வி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு 19 வயது. இவர், சென்னை திருவேற்காடு மாதிரிவேடு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 30-ம் தேதி திடீரென விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரின் உடல் சொந்த ஊரான ஈரோட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனிடையே நர்சிங் மாணவியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “தற்கொலை செய்துகொண்ட மாணவி, கல்லூரி விடுதியில் அறை எண் 11-ல் தங்கியிருந்தார். கல்லூரி விடுதிக்கான கட்டணத்தை அவர் கடந்த 5 மாதங்களாக செலுத்தவில்லை. அதனால் கட்டணத்தை செலுத்தும்படி, மாணவியை டார்ச்சர் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவி, தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து கட்டணத்தை செலுத்தும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து மாணவியை இனிமேல் விடுதியில் தங்கியிருக்க வேண்டாம், வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும்படி அவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். அதற்கு மாணவி, விடுதிக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே அங்கிருந்து வெளியில் வர முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மாணவியின் அம்மாவும் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார். பின்னர் மாணவியின் அப்பா செந்தில்குமார், கடந்த 29.7.2022-ம் தேதி மகளின் கூகுள் பே நம்பருக்கு 8,000 ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது மீண்டும் செந்தில்குமாரை தொடர்புகொண்ட மாணவி, கல்லூரி கட்டணத்தை மட்டும் அனுப்பியுள்ளீர்கள், விடுதி கட்டணத்துக்கு பணம் அனுப்பவில்லையா என்று கேட்டுள்ளார். அதனால் 30-ம் தேதி 4,000 ரூபாயை மகளுக்கு செந்தில்குமார் அனுப்பி வைத்துள்ளார். அப்போது போனில் பேசிய மாணவி, பணத்தை செலுத்திவிட்டு மாலை வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த மாணவியின் குடும்பத்தினர் மகளுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் மாணவியின் தோழி ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ளனர். அப்போது மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அதனால் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். மாணவியின் பெற்றோர் கூறியிருக்கும் கட்டண டார்ச்சர் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.