தமிழகத்தில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிர்விட்ட சம்பவம் ஒரு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மானம்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆறுமுகம்(91). இவரது மனைவி சுலோச்சனாவும் (86) ஆசிரியராக பணியாற்றியவர்.
தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்ட இந்த தம்பதியர், தங்கள் மகனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தை, அவரது மனைவி மற்றும் மகன் உட்பட பலரும் கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கமாக வீட்டு வேலைகளை செய்து வந்த சுலோச்சனா திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மூச்சு பேச்சில்லாமல் இருந்தார்.
பின்னர் அவரை பரிசோதித்தபோது உயிரிழந்துவிட்டார் என்று தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இறப்பு சடங்குகள் நடைபெற, சுலோச்சனாவின் கணவர் ஆறுமுகத்திடம் மனைவி இறந்த தகவலை உறவினர்கள் கூறியுள்ளனர்.
அதனைக் கேட்ட ஆறுமுகம் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
இதனால் மேலும் பதறிப்போன உறவினர்கள் அவரை எழுப்பினர். ஆனால் அவரது உயிரும் பிரிந்துவிட்டது. சுலோச்சனா ஏற்கனவே தன் கணவர் ஆறுமுகத்திடம், உங்கள் இறப்புக்கு முன்பே என் உயிர் பிரிந்துவிட வேண்டும், அதுதான் என் ஆசை என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறியது போலவே நடந்துவிட்டாலும், கணவரும் அவருடனே உயிர்விட்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது.