ஆண்டிப்பட்டி அருகே தனது காரில் மோதிய தனியார் பேருந்தை வீட்டிற்கு இயக்கிச் சென்று, பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள், டிவி, டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட
பொருட்களை திருடியதாக ஆயுதப்படை போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேனி ஆயுதப்படை போலீசாக உள்ளார். இவர் தனது காரில் தேனி நோக்கி சென்றபோது, ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரம் அருகே மதுரையில் இருந்து கம்பம் நோக்கி வந்த ஒரு தனியார் பேருந்து இவரது கார் மீது எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்கமாக மோதியதில் காரின் பின்பகுதி சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய கதிரேசன், தனது ஊர்காரர்கள் சிலருடன் சேர்ந்து தனியார் பேருந்து ஓட்டுரான மதுரை மாவட்டம், தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவரை தாக்கிவிட்டு, பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பேருந்தை தனது ஊரான டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் டி.பொம்மிநாயக்கன்பட்டி சென்று தனியார் பேருந்தை ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பேருந்தை ஆய்வு செய்தபோது பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள், டிவி, டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் அழகுராஜா ஆண்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்படி, ஆயுதப்படை காவலர் கதிரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM