தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பாகவும், கடைகள் மூடிய பின்னரும் பார்களில் மதுப்பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதன் பின்னர், மாவட்ட காவல் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு துணை காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக பட்டுக்கோட்டையில் உள்ள டாஸ்மார்க் பார்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே பார்கள் திறந்து அதில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் 700 மதுபாட்டில்களும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பட்டுக்கோட்டையில் உள்ள ஆலடிக்குமுளை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், முதல்சேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மற்றும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.