சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து தமிழக பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை வைத்துள்ளனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசியக் கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று அவர் தனது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக இந்திய தேசியக் கொடியை மாற்றினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலரும் முகப்பு படத்தில் தேசியக் கொடியை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது சமூக ஊடக முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளார். இதே கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் உள்ளிட்டவற்றிலும் முகப்பு பக்கத்திலும் தேசியக் கொடி வைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழக பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலரும் தங்களது சமூக ஊடக முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர்.
மேலும், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக ஊடக முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர்.
முன்னதாக, கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளோம். இதையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதிவரை அனைவரும் சமூக ஊடக முகப்பு புகைப்படங்களில் (புரோபைல்) தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.