பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதற்குப் பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கோவை, தொண்டாமுத்தூரில் அட்டுக்கல் என்ற இடத்தில் சிலர் நல்ல ஆரோக்கியமான மன நிலையுடன் இருப்பவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று மொட்டையடித்து சட்ட விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மனித கடத்தல் நிறுவனங்களுக்கு மறைமுகமாக தி.மு.க நிர்வாகிகள் உதவுகிறார்கள். தனியார் நிறுவனம் மூலம் கிறித்துவ மதமாற்றம் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் தமிழக பா.ஜ.க சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல கோவை பொறுப்பு அமைச்சரின் 200 கோடி ரூபாய் பேச்சு இருக்கிறது. தற்போதைய சுழலில் தி.மு.க-வைவிட நாங்கள் (பா.ஜ.க) மிக வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறோம்.
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் சுழலுக்கு பா.ஜ.க காரணமில்லை. அது அந்தக் கட்சியின் உட்கட்சி செயல்பாடுகள். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், குளங்களைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு வேறு இடங்களில் வசிப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும், குளங்களிலுள்ள உயிரினங்களைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்” என்றார்.
தேனரசன் (மாணவப் பத்திரிகையாளர்) வானதி