கேரள மாநிலத்தில் மனித உரிமைகள் அமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி “ துப்பாக்கிக்கு பதில் துப்பாக்கிதான்; பேச்சுவார்த்தை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில், மனித உரிமைகள் அமைப்பு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர். என். ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது துப்பாக்கியை பயன்படுத்துபவர்களுக்கு துப்பாக்கியால்தான் பதில் கொடுக்க வேண்டும். கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இனவாத குழுக்களின் மோதல்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் கடந்த 8 ஆண்டுகளில் குறைந்துள்ளது.மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை நம்மால் மறக்க முடியாது. அதுபோலவே காங்கிரஸ் கட்சி, இத்தாக்குதலின் போது நடந்துகொண்ட விதத்தையும் மறக்க முடியாது. நம் நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர். அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதில் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. . புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் காட்டியது. இதுபோன்றுதான் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“