தைவான் வந்திறங்கினார் நான்சி பெலோசி… 12 அமெரிக்க போர் விமானங்களும் தரையிறக்கம்…

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இந்திய நேரப்படி இன்றிரவு 8:15 மணிக்கு தைவான் வந்து இறங்கினார்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் தைவானை சீனா தனது நாட்டின் ஒரு அங்கமாக சொந்தம் கொண்டாடி வருகிறது.

தைவானை தனிநாடாக அங்கீகரிக்கும் எந்த ஒரு நாட்டின் செயலையும் கண்டித்து வரும் நிலையில், அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் அங்கு செல்வது கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

பெலோசி வருகை குறித்து அமெரிக்கா அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இதனால் பிராந்திய அமைதி சீர்குலையும் என்று கூறியதோடு நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் எச்சரித்தது.

இன்று காலை மலேசியா வந்த பெலோசி சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இன்றிரவு தைவான் வந்துள்ளார்.

அவருக்கு தைபேயில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தைவான் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப்பயணம் செய்ய பெலோசி திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், தைவானை சீனாவில் இருந்து பிரிக்கும் தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் போர் விமானங்கள் ராணுவ தளவாடங்கள் அனைத்தும் பயிற்சிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பெலோசியின் பாதுகாப்புக்காக ஜப்பானில் இருந்து 12 அமெரிக்க ராணுவ விமானங்களை தைவானில் தரையிறக்கி உள்ளது.

25 ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு செல்லும் முதல் அமெரிக்க அரசியல் தலைவர் என்ற வரலாற்றை நான்சி பெலோசி ஏற்படுத்தி இருக்கும் அதே வேளையில் இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.