நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – கூச்சல்களுக்கு மத்தியிலும் மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கம் நேற்று ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

மக்களவை நேற்று கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் பரிந்துரையை ஏற்று மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசும்போது, “அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 14 மாதங்களாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் நீடிக்கிறது. அரிசி, தயிர், பன்னீர், பென்சில் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு மக்களை நேரடியாக பாதித்துள்ளது” என்று குற்றம்சாட்டினார். சுமார் 30 எம்.பி.க்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

இறுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில் கூறியதாவது:

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பே இல்லை. அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 22 மாதங்கள் பணவீக்கம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. பாஜக ஆட்சியில் பணவீக்கத்தை 7 சதவீதமாக குறைத்துள்ளோம்

மத்திய அரசின் நடவடிக்கைகளால் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.4 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி உள்ளது. கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலிலும் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மசோதாக்கள் நிறைவேற்றம்

மாநிலங்களவை நேற்று கூடியதும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதே விவகாரத்தை எழுப்பினர். கடும் அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பேரழிவு ஆயுதங்களுக்கும் அவற்றின் விநியோகத்துக்கும் நிதி வழங்குவதை தடை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அன்டார்டிகா மசோதாவும் அவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பு அன்டார்டிகா வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இரு மசோதாக்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

கத்திரிக்காயை கடித்த திரிணமூல் எம்.பி:

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் நேற்று மக்களவைக்கு கத்திரிக்காயுடன் வந்திருந்தார். விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் அவர் பேசும்போது, “காய்கனிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சமையல் காஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. காஸ் விலை உயர்வால் உணவு பொருட்களை வேக வைத்து சாப்பிட முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார். தனது பேச்சின்போது திரிணமூல் எம்.பி. ககோலி, கத்திரிக்காயை பச்சையாக கடித்து சாப்பிட்டார். இதன்மூலம் அவையின் கவனத்தை அவர் தன்பக்கமாக திருப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.