நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த ஆண்டு தென்மேற்குப்பருவமழை இயல்பை விட அதிகம், அதாவது வழக்கத்தை விட 97% அதிக மழை பொழிவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
image
இதனிடையே நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவில் பெய்து வரும் கனமழையால், ஆங்காங்கே நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கும் சூழலில் 10 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் மழை பொழிந்து இருக்கிறது. கனமழை காரணமாக முத்தங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தகரபாடி என்னும் இடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  3,4 தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வயநாட்டில் சுற்றுலாத்தலங்கள், விடுதிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
image
அனைத்து அணைகளிலும், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. எர்ணாகுளத்தில், கோடநாடு யானைகள் சரணாலயம் அருகே திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா விடுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை, வெள்ளம் காரணமாக, 49 நிவாரண முகாம்களை கேரள அரசு திறந்துள்ளது. தாழ்வானப் பகுதிகளில் இருந்த சுமார் 800 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, காசர்கோட் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், எஞ்சிய அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் வரும் 5 ஆம் தேதி வரை மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.