இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், ராணுவ கமாண்டர் உட்பட, ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆறு பேரும் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கன மழை மற்றும் வெள்ளத்திற்கு, 147 பேர் பலியாகியுள்ளனர்; ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்பார்வையிட, லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உட்பட ஆறு ராணுவ வீரர்கள், உத்தல் பகுதியில் இருந்து கராச்சிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
ஆனால், நடுவழியில் ஹெலிகாப்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணி துவங்கியது. இந்நிலையில், லாஸ்பெலா மலைப் பகுதியில் சசி பன்னு என்ற இடத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களை தேடும் பணி துவங்கியது.
மோசமான வானிலை, மலைப் பிரதேசம் என்பதால் தேடும் பணி மந்தமாக நடக்கிறது. விமான விபத்தில் ஆறு பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பாக்.,கின் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், உளவுத் துறை தலைவருக்கான நேர்காணல் நடத்தினார். அதில், சர்பராஸ் அலி பங்கேற்றதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement