பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க… நெல் திருவிழா!| Dinamalar

புதுச்சேரி: பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, அரசு சார்பில் வரும் 8ம் தேதி கரிக்கலாம்பாக்கத்தில் நெல் திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில், விவசாயிகளுக்கு தலா 2 கிலோபாரம்பரிய நெல் விதைகள்இலவசமாக வழங்கப்பட உள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியால் மறைந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, துாயமல்லி, குதிரைவால் சம்பா உள்ளிட்ட 140 ரக நெற்களை இயற்கை முறையில் பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க வேளாண் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சட்டசபையில் அறிவிப்பு

இதற்காக, ஆண்டுதோறும் சம்பா பட்டத்திற்கு முன்பாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வேளாண் துறை சார்பில் நெல் திருவிழா நடத்தப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்தார்.

பிப்ரவரியில் விழா

அதனையொட்டி, முன்னோட்டமாக நவரை மற்றும் சொர்ணவாரி பட்டத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம், வடமங்கலம் கிராமத்தில் ‘நெல் திருவிழா’ நடத்தப்பட்டது.விழாவில், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள், அதன் பயன்கள், உர பயன்பாடின்றி பயிரிடும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இலவச விதை நெல்

விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் தலா 2 கிலோ வழங்கப்பட்டது.இந்நிலையில், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதன் காரணமாக, விலை சற்று கூடுதலாக இருந்தாலும், பாரம்பரிய ரக அரிசிகளை மக்கள் விரும்பி வாங்கத் துவங்கி உள்ளனர்.

8ம் தேதி நெல் திருவிழா

இதனால், பாரம்பரிய ரக நெல் பயிரிட விவசாயிகள் முன்வரத் துவங்கி உள்ளனர். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தாண்டு சம்பா பட்டத்திற்கு முன்பாக வேளாண் துறை சார்பில், வரும் 8ம் தேதி கரிக்கலாம் பாக்கத்தில் ‘நெல் திருவிழா’ நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
விழாவை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்து, 10 பாரம்பரிய ரக நெல் விதைகளை விவசாயிகளுக்கு தலா 2 கிலோ இலவசமாக வழங்குகிறார்.இந்த விதை நெல்லை, விவசாயிகள் நாற்று விட்டு, ஒற்றை நாற்று முறையில் பயிரிட ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

பரப்பளவை அதிகரிக்க திட்டம்

விழாவில், இலவசமாக விதை நெல் வாங்கும் விவசாயிகள், அதனை பயிரிட்டு அறுவடை செய்த பின், அரசுக்கு 4 கிலோ விதை நெல் வழங்க வேண்டும்.அவ்வாறு பெறப்படும் விதை நெல், அடுத்தாண்டு 2,000 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடும் பரப்பளவை அதிகரிக்க வேளாண் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.