புதுச்சேரி: முதல்வரின் பேனர்கள்; பூதக்கண்ணாடியுடன் புகார்… ஆட்சியருக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக

புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை சட்டம் அமலில் இருக்கிறது. ஆனாலும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரவிருக்கும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு இப்போதே நகர் முழுக்க பேனர்களை வைக்கத் தொடங்கிவிட்டனர் அவரின் ஆதரவாளர்கள். இந்நிலையில் புதுச்சேரி மாநில அதிமுகவின் துணை அமைப்பாளர் வையாபுரி மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வல்லவனுக்கு பூதக்கண்ணாடியுடன் கூடிய ஒரு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார். அந்த மனுவில், “புதுவையில் கடந்த ஜூன் மாதம் அதிமுக-வை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவுக்காக திருமண மண்டபத்தில் பேனர் வைக்கப்பட்டது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

அதேபோல அன்றைய தினம் புதுவையில் பல இடங்களில், வேறு சில தனி நபர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பேனர் வைத்திருந்த அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் மீது மட்டும் கலெக்டர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேறு யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை. திறந்தவெளி விளம்பரங்கள், பேனர்கள் தடை சட்டம் 2009 இன்றுவரை அமலில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும், பேனர்கள் வைக்க பிறப்பித்த தடை உத்தரவும் அமலில் உள்ளது. இச்சூழலில் புதுவை முழுவதும் தற்போது ஆயிரக்கணக்கான பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் பிரதான சாலைகளில் பயணம் செய்யும் கலெக்டருக்கு, புதுவையில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்களும், பேனர்களும் கண்களுக்கு தெரியவில்லையா ? கலெக்டருக்கு சமீபகாலமாக கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கிறது. அதனால்தான் அ.தி.மு.க சார்பில் புகார் மனுவுடன் பூதக்கண்ணாடியை இணைத்து அனுப்பியுள்ளோம். இந்த பூதக்கண்ணாடியின் உதவியோடு கலெக்டர் பிரதான சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும், பேனர் தடை சட்டத்தையும் கண் திறந்து பார்க்க வேண்டும். அத்துடன் உயர் நீதிமன்ற தீர்ப்பையும் வாசித்து பார்க்க வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான் என்பதை பொறுப்பு மிக்க கலெக்டர் உணர்வார் என நம்புகிறோம். அரசாங்கத்தில் இருக்கும் அரசியல் பிரமுகர்களின் காழ்ப்புணர்ச்சிக்காக, அவர்களின் அழுத்தத்தின் காரணமாக சட்டத்தை ஒருதலைப் பட்சமாக பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி புதுவையில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட், பேனர்களை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும் என்பதை புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் பூதக்கண்ணாடி வழங்கி, எச்சரிக்கை உணர்வோடு உணர்த்துகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.