பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: நிர்மலா சீதாராமனுக்கு பழனிவேல் தியாகாரஜன் பதில்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் பேசி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருந்தபோதும் மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று தெரிவித்தார். குறிப்பாக, அவர் திமுகவின் திமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி விமர்சித்தார். இதற்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிமேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைத்திருந்தபோதும் மாநில அரசு குறைக்கவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறினார். நவம்பர் 2021-ல், ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021-ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மேலும், ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது.

அதாவது, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாகக் குறைந்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 பைசா குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு மீன்வளத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது. இதனால், ஒன்றிய அரசிற்கு வருவாய் பல இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப, மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.

ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247%), டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790%) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி வந்துள்ளது. நவம்பர் 2021 மற்றும் மே 2021 ல் சேர்த்து, பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைத்துள்ளது. ஒன்றிய அரசு தனது வரிகளைக் குறைத்துள்ள நிலையிலும், 2014 ஆம் ஆண்டிலுள்ள வரிகளை ஒப்பிடும்போது, தற்போதுள்ள ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு10.42 ரூபாயும் (110%), டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342%) இன்னும் அதிகமாகவே உள்ளன. ஆகவே, ஒன்றிய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது.

03.11.2021 அன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால், மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், மே, 2022ல் அறிவித்துள்ளவரி குறைப்பால், மாநில அரசிற்கு மேலும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு எழுத்துபூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின் முடிவு மூன்று கட்டங்களில் எடுக்கப்பட்டது. மூன்றாவது கட்டம், அதாவது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில்தான் வரி விதிப்பிற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதில் ஒன்றிய அரசிற்கு 33 சதவீத வாக்கும், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தலா இரண்டு சதவீத வாக்கும் உள்ளது. பெரிய மாநிலமோ அல்லது சிறிய மாநிலமோ, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு சதவீத வாக்கு மட்டுமே. இவ்வாறு உள்ள கட்டமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் பரிந்துரையைதடுக்க வேண்டுமென்றால் ஏறத்தாழ 25 மாநிலங்களின் ஒருமித்த ஆதரவு வேண்டும். அல்லது ஒன்றிய அரசின் ஆதரவு வேண்டும்.

மேலும், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தில் முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த 56 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரிவிதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதியமைச்சரே குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம் மற்றும் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம். ஆனால், ஒன்றிய வரிகளில் இருந்து நமக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டுமே. தொடர்ந்து வந்த நிதிக் குழுக்களால் தமிழ்நாட்டிற்கு நிதிப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை , உரிய பங்கு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.