திண்டுக்கல்லில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில், நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில், திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பை வீடியோவாக எடுத்த ஆனந்த்ராஜ் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி ஆனந்த்ராஜிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையடுத்து தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்குச் சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். அப்போது திவ்ய பாரதி இரண்டு பெண் குழந்தைகள் அழைத்துச் சென்றுள்ளார் இவர்கள் தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்காவின் கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த ஆனந்தராஜின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே திவ்யபாரதிக்கும் ஆனந்தராஜுக்கும் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் ரூ.30 ஆயிரத்தை ஆனந்த்ராஜ் கொடுத்து வந்துள்ளார். மேலும் திவ்யபாரதி உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் என ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆனந்தராஜிடம் ஆசை வார்த்தை கூறி 8 பவுன் தங்க நகைகள் வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆனந்த்ராஜ் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் போதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆனந்தராஜ் திவ்யபாரதியை பற்றி விசாரித்துள்ளார். அப்போது திவ்யபாரதி நடத்தை சரியில்லை என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என தெரியவந்தது.
இதையடுத்து தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட ஆனந்தராஜ் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் ஆனந்த்ராஜ் புகார் அளித்தார். தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM