சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சாலை விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சி சாலை பாதுகாப்பு குழுமம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சாலை விதிகள் கண்காணிக்கும் பணியில் சென்னையில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்த இருப்பதாகவும், அதற்காக மாணவர்களுக்கு ஒரு லட்சம் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தவர், இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் விரிவுபடுத்தப்படும் என கூறினார்.
இந்த மாணவர்கள் மூலம், சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்கப்படுகின்றார்களா என்பது கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் என்ன தவறுகளை செய்கிறார்கள் என்பதைப் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிப்பிட மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த அட்டைகளை ஆய்வு செய்து, அந்த தறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னையில் kக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகன பெருக்கம் காரணமாக சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் பழைய நிலையிலேயே இருப்பது என்றவர், முடிந்த அளவு போக்குவரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி இருப்பதாகக் கூறினார். எந்த பகுதியில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளின் தகவல்கள் கூகுள் மேப் மூலம் கண்காணித்து, தரவுகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.