மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை… தென்னிந்தியாவுக்கு பின்னடைவா?!

தற்போது 543 ஆக இருக்கும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க பா.ஜ.க அரசு திட்டம் வகுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஆண்டு கூறினர். அதையடுத்து, இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதமாக எழுந்தது. தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், “2031-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது நாட்டுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலை ஏற்படுத்தும்” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

புதிய மாநிலங்களவை எம்.பி-க்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “2026-ம் ஆண்டு வரை மாநிலங்களவையை மறுவரையறை செய்யக் கூடாது என்ற சட்டத் திருத்தத்தை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது. அதாவது, 2026-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்காது. அதன் பிறகு, 2031-ம் ஆண்டு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

வாஜ்பாய்

ஆனால், நாட்டுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தென் மாநிலங்களும், மேற்கு மற்றும் சில வடக்கு மாநிலங்களும் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியிருக்கின்றன. அதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை குறைந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிஷா போன்ற மத்திய மாநிலங்களில் அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்திருக்கும். இது, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் எதிரொலிக்கும். அரசியல் சாசனத்தை தற்போதைய மத்திய அரசு திருத்தலாம். ஆனால், 2026-ம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே எம்.பி-க்கள் மறுவரையறையை செய்ய வேண்டும் என்று தற்போதைய அரசியல் சாசனம் சொல்கிறது.

மணீஷ் திவாரி

அவ்வாறு செய்யும்போது, அதை கேரளா எதிர்க்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் எதிர்க்கும். அந்த மாநிலங்களில் பா.ஜ.க அரசு இருந்தாலும், அதுதான் நடக்கும். இந்த நடவடிக்கையால் பஞ்சாப் மாநிலமும் பாதிக்கப்படும். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் இதை எதிர்க்கும். இதை தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.

2031-ல் நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். ஆனால், 2024-க்கு முன்பாகவே எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பா.ஜ.க திட்டம் வைத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் திவாரி கடந்த ஆண்டே கூறினார். அப்போதே, “நிறைய எம்.பி-க்கள் நாட்டுக்குத் தேவை. ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படும் என்றால், தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறையும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.

கார்த்தி சிதம்பரம்

எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2020-ம் ஆண்டு டிசம்பர் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.மேலும், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 1,000 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், எம்.பி-க்களின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தப்போகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதிசெய்தனர்.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில், மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்படுவதாகக் கூறிய ஓம் பிர்லா, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின்போது 1,224 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்று தெரிவித்தார். மாநிலங்களவை 384 இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார். அப்படியென்றால், எம்.பி-க்களின் எண்ணிக்கையை உயர்த்தப்போகிறார்கள் என்று தெரியவருகிறது.

நாடாளுமன்றம்

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படுமானால், தென் மாநிலங்களின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள்தொகையை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இதனால், ஏற்கெனவே இங்கு எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது, 1962-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து மக்களவைக்கு 41 எம்.பி-க்கள் இருந்திருக்கிறார்கள். இங்கு மக்கள்தொகை குறைந்ததால், எம்.பி-க்கள் எண்ணிக்கை 39 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஆந்திராவும் மக்கள்தொகையைக் குறைத்த காரணத்தால், அந்த மாநிலத்தின் மக்களவை எம்.பி-க்களின் எண்ணிக்கை 42-லிருந்து 40 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி தனித் தொகுதி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் உத்தரவை கடந்த ஆண்டு பிறப்பித்தது. அதில், “தமிழ்நாடும் ஆந்திராவும் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக, தமிழ்நாட்டில் 41 ஆக இருந்த எம்.பி-க்கள் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திராவில் 42 ஆக இருந்த எம்.பி-க்கள்எண்ணிக்கை 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் அதிகாரம் வெகுவாகப் பறிபோயிருக்கிறது.

அதே நேரம்,மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்.பி-க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் தமிழ்நாட்டில் 1967 முதல் 2019 வரை நடந்த 14 மக்களவைத் தேர்தல்களில் தலா 2 எம்.பி-க்கள் என மொத்தம் 28 எம்.பி.க்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டிய உரிமை, பலன்களை தமிழ்நாடு இழந்துள்ளது” என்று கூறப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மேலும், “ஒரு எம்.பி மூலமாக மாநிலத்துக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக ஐந்து ஆண்டுகளில் ரூ.200 கோடி கிடைக்கும் என்று தோராயமாக கணக்கிட்டால், 1967 முதல் 2019 வரை நடந்த 14 தேர்தல்களில் இரண்டு எம்.பி-க்களை இழந்து தமிழ்நாடு சந்தித்த இழப்புக்கு மத்திய அரசு ஏன் ரூ.5,600 கோடியை இழப்பீடாக தமிழ்நாட்டுக்கு வழங்கக்கூடாது. இனிவரும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டின் எம்.பி-க்கள் எண்ணிக்கையை குறைக்க ஏன் தடை விதிக்கக் கூடாது. மக்களவை எம்.பி-க்களின் எண்ணிக்கையை குறைத்தால், அதற்கு பதிலாக ஏன் மாநிலங்களவை எம்.பி-க்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது” என்று மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த அம்சங்களையெல்லாம் மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளுமா? எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மக்கள் மத்தியில் பொதுவிவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய ஆட்சியாளர்கள் செவிசாய்ப்பார்களா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.