மதுரை: மதுரையில் கோயில் திருவிழாவுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக காய்ச்சிய கொதித்த கூழ் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியிலுள்ளது முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமை யொட்டி 29-ம் தேதி கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு விநியோக்க கோயில் விழா கமிட்டினர் திட்டமிட்டனர். இதற்காக அன்று மாலை கோயிலுக்கு எதிரே அகன்ற 6 பாத்திரங்களில் கூழ் காய்ச்சப்பட்டது. இப்பணியை கோயில் விழாக் கமிட்டியைச் சேர்ந்த முத்துக்குமரன் (52) உள்ளிட்டோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 6 பாத்திரங்களிலும் கூழ் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது, அருகில் சென்ற முத்துக்குமரன் எதிர்பாராதவிதமாக தடுமாறியபடி ஒரு பாத்திரத்திற்குள் விழுந்தார். கொதித்த கூழ் பாத்திரத்தைவிட்டு அவரால் வெளியேற முடியாமல் தவித்தார். அருகில் நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஏற்கெனவே கொதிக்கும் கூழ் என்பதால் அவர்களாலும் அருகில் செல்ல முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அடுப்பில் இருந்த கொதித்த கூழுடன் பாத்திரத்தை கீழே கவிழ்த்தி அவர் மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது வயிறு உள்ளிட்ட உடல் பாகங்கள் வெந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரிந்தது.
இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ”முத்துக்குமரனுக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருப்பதாகவும், கூழ் கொதிக்கும் பாத்திரம் அருகே சென்றபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, உள்ளே விழுந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனிடையே, கோயிலில் பக்தர்களுக்கு வழங்க கூழ் காய்ச்சியபோது, கொதித்த கூழுக்குள் முத்துக்குமரன் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இச்சம்பவம் காண்போருக்கு பரிதாபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.