தமிழ் திரைத்துறையின் பிரபல சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட விவகாரத்தில், அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் மதுரை காமராஜர் நகரில் இருக்கும் வீடு, அவரின் திரையரங்கம் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டை தொடர்ந்து தயாரிப்பாளர்கள், கலைப்புலி தாணு, எஸ்.ஆர் பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் அலுவலகங்களிலும் ஐ.டி அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.