மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியாரின் செயற்கை அருவிகள் அகற்றம்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியார் நிலங்களில் உள்ள செயற்கை அருவிகளை அகற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.

இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளன. பெரும்பாலான தனியார் அருவிகள் இயற்கையாக வரும் நீரோடைகளை வழிமறித்து, நீரோட்டத்தை திசை மாற்றி செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வரை குளிக்க 100 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேக்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் எருமைச்சாடி ஓடையை மறித்து, நீரோட்டத்தை திசை மாற்றி தனியார் நிலங்களில் செயற்கை அருவிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் விவசாயத்துக்கு போதிய நீர் கிடைப்பதில்லை என்றும், தனியார் அருவிகளில் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.

தனியார் அருவிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்களை ஆங்காங்கே வீசிச் செல்வதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க குழுவை அமைத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை அளித்தது. விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த தனியார் அருவிகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுபோல், 10-க்கும் மேற்பட்ட தனியார் நிலங்களில் உள்ள செயற்கை அருவிகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சமீபத்தில் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிலையில், நோட்டீஸ் காலம் முடிந்தும் அகற்றப்படாமல் இருந்த செயற்கை அருவிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

மேக்கரை அருகே எருமைச்சாடி நீரோடையின் நீரை திசை திருப்பி அமைக்கப்பட்டிருந்த தனியார் அருவி இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “மேக்கரை அருகே ஒரு தனியார் அருவி அகற்றப்பட்டுள்ளது. குண்டாறு அணை அருகே உள்ள தனியார் அருவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அருவியையும் உரிமையாளர் அகற்றாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.