வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: ஆசிரியர் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் கைதாக, முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, பெண் ஒருவர் அவர் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி தொடர்பான வழக்கில் அம்மாநில தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.50 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜியை உடல் பரிசோதனைக்காக கோல்கட்டா மருத்துவமனைக்கு அதிகாரிகள் வந்தனர். பரிசோதனை முடிந்து கிளம்புவதற்காக பார்த்தா சாட்டர்ஜி காரில் காத்திருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், தான் அணிந்திருந்த இரண்டு செருப்புகளையும் அவர் மீது வீசினார். ஆனால், செருப்பு கார் மீது விழுந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் சுப்ரா எனவும், ஒரு குழந்தைக்கு தாயான அவர் அம்தலா பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. செருப்பு வீசியதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், நான் இங்கு மருந்து வாங்க வந்தேன். எங்களால் டாக்டரை கூட சரியாக பார்க்க முடியாது. ஆனால், அவர்கள் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளனர். கோல்கட்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகின்றனர். மருத்துவமனைக்கு பெரிய கார்களில் வருகின்றனர். இதனால், தான் செருப்பு வீசினேன். செருப்பு, அவரது தலையில் விழுந்திருந்தால் அமைதி கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
என்னுடைய பணம் அல்ல
இதனிடையே, அர்பிதா முகர்ஜி கூறுகையில், எனது வீட்டில் சிக்கிய பணம் என்னுடையது அல்ல. நான் வீட்டில் இல்லாத போது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் சிக்கிய பணம் என்னுடையது அல்ல. இந்த விவகாரத்தில் நான் சிக்க வைக்கப்பட்ட போது காலம் வரும்போது கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement