“ரெட் அலர்ட் விடுத்தும் மீனவர்களை மீட்பதில் திமுக அரசு மெத்தனம்” – இபிஎஸ் சாடல்

சென்னை: “ரெட் அலர்ட் விடுத்தும் திமுக அரசு மீனவர்களை மீட்பதில் மெத்தனப் போக்குடன் இருந்திருக்கிறது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த அரசு, மீனவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவலை அறிவிக்காத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த 4 மீனவர்களில் 2 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

மீன்வளத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே நடைபெற்ற இந்த அவலம் மீனவர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் சுமார் 15 விசைப் படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்ற தகவல் இம்மாவட்ட மீனவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், திமுக அரசும், மீன்வளத் துறையும், இனியாவது தூக்கத்தில் இருந்து விழித்து, மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்தப் பருவமழைக் காலம் முடியும்வரை, தமிழகத்தின் கடல் பகுதிகளில் முழு வீச்சுடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வற்புறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.