மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உத்தவ் தாக்கரே அணியின் சிவ சேனா கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அம்மாநில முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே பேசுகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை தாக்கி பேசினார்.
அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே கூறியதாவது” உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, தாங்கள் பாரபட்சம் காட்டப்படுவறதாக யாரும் உணரவில்லை. ஆனால் இப்போது வேண்டுமென்றே பிராந்தியவாதம் கொண்டு வரப்படுகிறது. மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் மகாராஷ்டிராவை வீழ்த்தி ஐந்தாக பிரிக்க விரும்புகிறார்கள்.
மகாராஷ்டிரா மக்கள் பிரிவினை வாதத்தை ஏற்க மாட்டார்கள். ஏக்நாத் ஷிண்டே வை நம்பி பிரிந்து சென்ற 40 எம்எல்ஏக்களும் எங்களிடம் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம். ஏக்நாத் ஷிண்டே வின் அரசு நாடக கூத்து. தவறை உணர்ந்து எங்களிடம் திரும்பி வரும் கட்சியினரை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
மேலும் இரண்டு நாள் பயணமாக சிந்து துர்கா பகுதிக்கு சென்ற ஆதித்ய தாக்கரேவிடம் கட்சியினர் பலர் கடிதங்களை கொடுத்தனர். உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவான கட்சியினர் ரத்தத்தால் எழுதிய தங்களுடைய ஆதரவு கடிதத்தை ஆதித்ய தாக்கரேவிடம் வழங்கினர் .
மேலும் பேசிய ஆதித்ய தாக்கரே ” எனக்கு யார் மீதும் கோபம் இல்லை ஆனால் வருத்தங்கள் இருக்கிறது. 40 எம்எல்ஏக்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றது தான் அந்த வருத்தம். இது எங்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.
புரட்சி செய்வதற்கு தைரியம் வேண்டும் ஆனால் நம் எதிரிகளுக்கு தைரியம் கிடையாது. பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள் தைரியம் இருந்தால் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும்.
சஞ்சய் ராத் எம்.பி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்டது. இது சிவசேனாவின் குரலை ஒடுக்குவதற்காக பாஜக எடுத்திருக்கும் முயற்சி. தைரியத்துடன் எதிர்த்து நின்று நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு ஆதித்ய தாக்கரே பேசியுள்ளார்.