தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு மூலவைகையில் பிறப்பிடமான வருஷநாடு, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறுகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. கடந்த ஒருவாரமாக மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களில் தொடர்மழை பெய்து வருகிறது. அதே வேளையில் தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்தது.
ஜூலை 30 ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. இதனால் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. நீர்வரத்து 2300 கனஅடியாக உள்ளது. இன்று நீர்வரத்து 2630 கனஅடியாகவும், நீர்மட்டம் 69 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் போது 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் வைகை கரையோர மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை மொத்தம் 126.26 உயரம் கொண்டது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து அதிக நீர்வரத்து இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக கொடைக்கானலில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 140 கனஅடி நீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 122.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. குறிப்பாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல மஞ்சளாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 58 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணையின் மொத்த உயரம் 57 அடி, தற்போது 55 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. இதனால் இரண்டு கண் மதகு வழியாக வினாடிக்கு 277 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சண்முகநதி அணை நீர்மட்டமும் 36 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பி வரும் நிலையில், தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.