இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போன் என்பது ஒருவருடைய ஒட்டு மொத்த ஜாதகத்தையே உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டால் அந்த ஸ்மார்ட் போனுக்கு உரியவரின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் ஸ்மார்ட் போன் தொலைந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
வங்கி கணக்குகள், முதலீடு விவரங்கள், இமெயில்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் உள்பட பல முக்கிய தகவல்கள் ஸ்மார்ட்போனில் அடங்கியிருக்கும். எனவே ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட்ஃபோன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல், டிஜிட்டலில் பணம் செலுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது வரை ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம்.
ஸ்மார்ட்போன் திருடு போனால்
இருப்பினும் எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட்போன் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை, திருடியவர்கள் பயன்படுத்துவதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளை பயன்படுத்துவதால் ஸ்மார்ட்போன் திருடர்கள் அந்த செயலிகளை பயன்படுத்த தயங்க மாட்டார்கள். எனவே ஸ்மார்ட்போன் திருட்டு போனால் உடனடியாக கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சிம்கார்டு செயலிழப்பு
சிம்கார்டு இல்லாமல் எந்தவொரு வங்கி செயலியோ, டிஜிட்டல் பேமெண்ட் செயலியோ செயல்படாது என்பதால் போன் திருட்டு போனால் உடனடியாக தொலைந்த ஸ்மார்ட்போன் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சிம்கார்டை செயலிழக்க செய்ய வேண்டும். சிம் கார்டை செயலிழக்கம் செய்வதால் ஓடிபி எண்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் பல முறைகேடுகளை உடனே தவிர்த்துவிடலாம்.
மொபைல் வங்கி சேவை
சிம் கார்டுகள் மட்டுமின்றி, மொபைல் வங்கிச் சேவைகளையும் உடனடியாக முடக்க வேண்டியது மிகவும் அவசியம். சிம்கார்டு, வங்கி சேவைகளை முடக்கிவிட்டால் பாதி முறைகேடுகளை உடனடியாக தவிர்த்துவிடலாம்.
UPI சேவையும் முடக்கம்
ஸ்மார்ட்போனை திருடியவர்கள் ஆன்லைன் வங்கிச் சேவைகளை அணுக முடியவில்லை என்றால், UPI பேமெண்ட்டுகளை கையாள முயற்சிக்கலாம். அதனால் சிம்கார்டு, வங்கி சேவைகளை முடக்கிய பின்னர் உடனடியாக UPI பேமெண்ட் சேவையையும் செயலிழக்க செய்ய வேண்டும்.
கூகுள் பே மற்றும் பேடிஎம்
கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்க வேண்டும். அதற்கு கஸ்டமர் கேர் எண்களை தொடர்பு கொண்டு முடக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனை திருடியவரின் பரிவர்த்தனையை தடுக்க முடியும்
இமெயில்கள்
ஸ்மார்ட்போனில் லாகின் செய்த இமெயில்கள் அனைத்தையும் உடனடியாக லாக்-அவுட் செய்துவிட வேண்டும். உடனடியாக ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் இமெயிலை லாகின் செய்து பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள். அவ்வாறு செய்தால் ஸ்மார்ட்போனை திருடியவர் நம்முடைய இமெயிலை பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம்.
சமூக வலைத்தளங்கள்
அதேபோல் ஸ்மார்ட்போனில் நாம் பயன்படுத்திய அனைத்து சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டையும் உடனடியாக மாற்றிவிட வேண்டும். இதனால் அதில் உள்ள புகைப்படங்கள் உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாக்க உதவும்.
காவல்துறையில் புகார்
மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் செய்த பிறகு, காவல்துறையில் புகாரளிப்பது முக்கியம். தொலைபேசி தவறாக பயன்படுத்தப்பட்டாலோ அல்லது உங்கள் பணம் திருடப்பட்டாலோ காவல்துறையின் எப்.ஐ.ஆர் நகல் உதவும்.
If your phone lose, Five steps to keep your banking details and online wallet safe!
If your phone lose, Five steps to keep your banking details and online wallet safe! | ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் உடனே இதை செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் பெரும் சிக்கல்!