ஹீரோ அதிகாலை 3 மணிக்கு அழைத்தாலும், செல்ல தயாராக இருப்பவருக்கே பட வாய்ப்பு-மல்லிகா ஷெராவத்

கதாநாயகர்களுடன் சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளுக்கே பட வாய்ப்பு கிடைப்பதாக பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் பரபரப்பு குற்றாச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் பிறந்தவரான மல்லிகா ஷெராவத், கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘Jeena Sirf Merre Liye’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ஒருசில இந்திப் படங்களில் நடித்தாலும், கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘மர்டர்’ படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமான நடிகையாக மாறிய மல்லிகா ஷெராவத், ஜாக்கிசன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் கமல்ஹாசனின் ‘தசாவதாரம் ’ படத்தில் வில்லியாகவும், மணிரத்னத்தின் ‘குரு’ மற்றும் சிம்புவின் ‘ஒஸ்தி’ ஆகியப் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். கடைசியாக ‘RK/RKay’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மாதம் ஜூலை 22-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், கதாநாயகர்களுடன் சமரசம் செய்துகொள்பவர்களே பட வாய்ப்பு பெறுவதாகும், தான் அந்தவாறு நடந்துகொள்ளாததால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததாகவும் மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ளப் பேட்டியில், பாலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி பேசியுள்ளார். அதில், “பாலிவுட் ஏ-லிஸ்டர் ஹீரோக்கள் அனைவருமே என்னுடன் வேலை செய்ய மறுத்துவிட்டனர், ஏனென்றால் நான் அவர்களுடன் சமரசம் செய்துக்கொள்ளமாட்டேன் என்பதால்” என்று தெரிவித்துள்ளார்.

image

மேலும் அவர் தெரிவிக்கையில், “மிகவும் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளே ஹீரோக்கள் விரும்புகிறார்கள். நான் அப்படிப்பட்டவள் இல்லை. என்னுடைய ஆளுமையும் அதுவல்ல. யாரோ ஒருவரின் விருப்பங்களுக்கும் நான் என்னை உட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை” என்றும் 45 வயதான மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

“சமரசம் என்பது என்னவெனில் ஹீரோக்கள் உட்கார் என்றால் உட்கார வேண்டும், நிற்க வேண்டும் என்றால் நிற்க வேண்டும், எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதிகாலை 3 மணிக்கு உங்களை ஹீரோ அழைத்து, அவரது வீட்டுக்கு வரச்சொன்னால், நீங்கள் அங்கு உடனடியாக போகவேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தில் இருக்க முடியும். ஒருவேளை நீங்கள் ஹீரோ வீட்டுக்கு செல்ல மறுத்தால், நீங்கள் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

image

இந்தி பட வாய்ப்பு குறைந்தது குறித்து கேள்வி கேட்டபோது, “நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேட முயற்சித்தேன். எல்லோரையும் போலவே நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தன, சில கதாபாத்திரங்கள் நன்றாக இருந்ததில்லை. பொதுவாக ஒரு நடிகரின் பயணத்தில் இதுவும் ஒரு பகுதியாகும். ஆனால் எனது திரை வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அற்புதமாக இருந்தது” எனவும் மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

ஜாக்கிசன் படத்தில் நடித்தது குறித்தும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இரண்டு முறை சந்தித்தது குறித்தும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ள மல்லிகா ஷெராவத், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் போதை பொருள் பழக்கம், நெப்போடிசம் எனப்படும் திரையுலக வாரிசுகளின் ஆதிக்கம், சுஷாந்த் சிங் சம்பவம் ஆகியவற்றால் சர்ச்சை நிலவி வரும்நிலையில் மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.