திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக மிக தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாளாக திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி நெய்யாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.அதன்படி நாளை வரை பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று 10 மாவட்டங்களுக்கும் நாளை 11 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு கடந்த 3 நாளில் 8 பேர் பலியானார்கள். பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரும், திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியானார்கள்.கண்ணூரில் பெய்த கனமழையை தொடர்ந்து நேற்று இரண்டரை வயது பெண் குழந்தை நுமா தஸ்லின் உள்பட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இன்று காலை குழந்தையின் உடல் மற்றும் ராஜேஷ் (40) என்பவரது உடலும் மீட்கப்பட்டது. மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோட்டயத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரியாஸ் என்பவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. கனமழையை தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை தள்ளி வைத்து உள்ளது. இதற்கிடையே அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 4 குழுவினர் கேரளாவுக்கு வந்து உள்ளனர்.