புதுடெல்லி: கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முடிவடைந்தது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனையானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் சூழலில், 5ஜி சேவைக்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இதற்காக 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. இதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி ஆகும். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், 7-வது நாளான நேற்று ஏலம் முடிந்தது. இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) மட்டுமே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதில் அதிக அளவாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, 24,740 மெகாஹெர்ட்ஸை ரூ.88,078 கோடிக்கும், சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் 19,867 மெகாஹெர்ட்ஸை ரூ.43,084 கோடிக்கும் வோடஃபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் 400 மெகாஹெர்ட்ஸை ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி நிறுவனம் தனியார் சேவைக்கு மட்டுமே ஏலம் எடுத்துள்ளதாகவும் பொதுமக்கள் சேவைக்கு அல்ல என்றும் கூறப்படுகிறது.
5ஜி ஏலம் தொடர்பான தகவல்களை தொகுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.