7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, கருமுட்டை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், வரும் 7 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவைத்துறையின் அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினருடன்  தமிழ்நாடு சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அவர்களிடம், தமிழக சுகாதாரத்துறையின் திட்டங் களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை விளக்கினார். அத்துடன், அதிகளவில் பெண்களுக்கு கருத்தடை வலையத்தை   பொருத்தியதற்காக தேசிய அளவில் வழங்கப்பட்ட விருதை காண்பித்து, குடும்ப நலத்துறை மருத்துவர்கள் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், டெல்லியில் 27.7.2022 நடைபெற்ற தேசிய மாநாட்டில் கருத்தடை வலையம் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக பொருத்தப் பட்டுள்ளதற்காக தேசிய அளவில் முதல் இடம் பிடித்தற்கான விருது பெறப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகளவில் கருத்தடை வலையங்களை குடும்ப நலத்துறை பொறுத்தி சாதனை படைத்துள்ளது.

மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. முறைகேடுகளை தடுக்க மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையாள்கிறார்களா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விவகாரம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதில் தொடர்புடைய மருத்துவமனை களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் சுகாதாரத்துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரிப்பு மையங்களுக்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேருக்கு போட வேண்டியது இருக்கிறது. வரும் 7 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும். மேலும், இதுவரையும் தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவு வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.