ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் அதிரடியாக பாகிஸ்தான் நாட்டில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில் மீண்டும் தலைதூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவரும், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவருமான அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடந்த ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!
இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அல் கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். நீதி வழங்கப்பட்டு உள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.
அல் கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மன் அல் ஜவாஹிரி. அவரை அதி முக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.