இணையதளத்தில் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட நான்சி பெலோசியின் விமானம்

தைபே சிட்டி,

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த திங்கள்கிழமை தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்தது.

இருப்பினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி நேற்று விமானம் மூலம் தைவானுக்குச் சென்றார். நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன.

மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன. இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது.

இந்த நிலையில், நான்சி பெலோசி பயணம் செய்த விமானம், இணையதளத்தில் அதிகம் பேரால் கண்காணிக்கபட்ட விமானம் என்ற பெயரை பெற்றுள்ளது. பிளைட் ரேடார் 24 (FlightRadar24) என்ற விமான கண்காணிப்பு இணையதளம் மூலமாக விமானங்களை பின்தொடர்பவர்களை கண்காணிப்பது வழக்கம்.

இந்த இணையதளம் மூலமாக சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் நான்சி பெலோசி பயணம் செய்த விமானத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக நேற்று கவனித்தனர். இதனால் அதிகம் பேரால் கவனிக்கப்பட்ட விமானமாக இது மாறியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.