இலங்கைக்கு இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா உதவி; அதிபர் விக்ரமசிங்கே நன்றி

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்ல கூடிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார்.

எனினும், மக்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இலங்கையில் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படவில்லை. அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு தேவையான எரிபொருள், உரம், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அண்டை நாடான இந்தியா வழங்கி உதவிக்கரம் நீட்டியது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று பேசும்போது, நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியா, நம்முடைய பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கியது என தனிப்பட்ட முறையில் குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை வழங்கியது. என்னுடைய மக்கள் சார்பாகவும் மற்றும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.