இளம்பெண்ணை வீடுபுகுந்து கடத்திய கும்பல்.. நெடுஞ்சாலையில் காருடன் மடக்கிப் பிடித்த போலீசார்.!

மயிலாடுதுறையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்டார். காதல் விவகாரத்தில், இளம்பெண்ணை கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞர், மயிலாடுதுறை ((மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள)) மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரை அவர் காதலித்துள்ளார். பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளார்.

அதன் பின்னரும் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்தொடர்ந்த இளைஞர், அவரது வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் இளம்பெண்ணின் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர்.

இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார், இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் அப்பெண்ணை விக்னேஷ்வரன் கடத்த முயற்சித்த போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அந்த கும்பல் ((கதறகதற)) தூக்கிச் சென்றுள்ளனர்.

மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய காவல்துறையினர் பெண்ணைக் கடத்திய நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இளம்பெண் கடத்திச் செல்லப்பட்ட கார் எங்கு செல்கிறது எனக் கண்டறிந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி டோல்கேட் அருகே, உள்ளூர் போலீசார் வாகனத்தில் வந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இளம்பெண்ணை கடத்திச் செல்வதை அறிந்த போலீசார், காரில் இருந்த விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, பெண் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்களை அழைத்து வர மயிலாடுதுறை போலீசார் விக்கிரவாண்டி விரைந்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் பலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.