டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதால், விசாரணை நேர்மையாக நடைபெற, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கிறோம் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடுகிறோம். லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் புதிதாக மீண்டும் விசாரிக்க வேண்டும்,’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.