தனக்கு வாய்க்கொழுப்பு என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.
சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு அதிமுக கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் சீமான் பேசுவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ‘அதிமுகவின் மறைந்த தலைவர்களை சீமான் விமர்சித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்தார்.
சீமான் தனது வாய்க் கொழுப்பு அதிகமாக இருப்பதாகவும், அதிமுக விடம் காட்ட வேண்டாம் திமுகவிடம் காட்டுங்கள், இல்லையெனில் கடும் விளைவுகளை சீமான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் பிற்காலத்தில் சீமானுக்கு அவரது கட்சி காரர்கள் சிலை வைப்பதாக இருந்தால் ஆமைக்கறியை தான் சிலையாக வைப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்,
‘எனக்கு வாய்க்கொழுப்பு, ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு. ஜெயக்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
பாஜகவையோ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையோ பேசினால், உடனே வீட்டிற்கு சோதனை செய்ய வருவார்கள் என்று பயம். ஆனால், என்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது. நான் அவரை அண்ணன் என மதிக்கிறேன். அதனால் ஜெயக்குமார் என்னை அப்படி பேசுகிறார். அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் என்ற கட்சிக்காவது தனித்துப் போட்டியிட தைரியம் உள்ளதா?’ என கேள்வி எழுப்பினார்.