கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள், அக்டோபர் 31-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், அவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே நேரம், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சி.யு.இ.டி. தேவு, ஆகஸ்ட் 20-ம் தேதியன்றுதான் முடிவடைகிறது. அதன் பிறகு முடிவுகள் வெளியாக இரு வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. அதேபோல், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை.
இத்தகைய பொது நுழைவுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், முன்னெச்சரிக்கையாக பிற கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே, நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்களின் கல்லூரிச் சேர்க்கை மாறுபடலாம் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி. முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்கள், வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் வேறு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாற விரும்பினால், அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை முழுமையாக கல்லூரி நிர்வாகம் திருப்பித் தர வேண்டும் என, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, சேர்க்கையை ரத்து செய்ததற்காக மாணவர்களிடம் கல்லூரிகள் தனியே கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாது. கல்லூரிகள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை 2022 அக்டோபர் வரை மேற்கொள்ளலாம் எனவும், யு.ஜி.சி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. யு.ஜி.சி.யின் இந்த உத்தரவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.