தைவானை அமெரிக்கா கைவிடாது என, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான சீனா, தைவான் நாட்டை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. இதற்கு தைவான் அரசு மறுப்புத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தனது படைகளைக் கொண்டு தைவான் நாட்டை சீனா அவ்வப்போது பயமுறுத்தியும் வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி அரசு முறை பயணமாக தைவான் சென்றுள்ளார். இந்த பயணத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி, தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்ப்பை மீறி தைவான் செல்லும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – சீனா எச்சரிக்கை ..!
அதன்பின் செய்தியாளர்களிடம் நான்சி பொலேசி பேசியதாவது:
உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது. தைவானை அமெரிக்கா கைவிட்டு விடாது. என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரை நேரில் அழைத்து சீன அரசு தனது கண்டனத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.