புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆலோசிக்க 5-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம், நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குப்பின் அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பேட்டியில் கூறியதாவது: விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் நிகழ்ச்சிகளை வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்துவது குறித்து பாஜக தலைவர் ஆலோசனை நடத்தினார். கலாச்சார நிகழ்ச்சிகள் பல நடத்தப்படவுள்ளன. எம்.பி.க்களுக்கான மூவர்ண பைக் பேரணி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்றம் வரை விரைவில் நடத்தப்படவுள்ளது.
குடியரசுத் துணை தலைவர் தேர்தலை முன்னிட்டு, நாங்கள் நாளை மறுநாள் மீண்டும் சந்தித்து ஆலோசிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.