புதுடெல்லி: தனது சமூக வலைதள பக்கங்களின் ‘டிபி’யில் பிரதமர் மோடி தேசியக்கொடியை வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று மான் கி பாத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரையில் தங்களின் காட்சி படமாக (டிபி) தேசியக்கொடியை வைக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, அவர் நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை வைத்தார். பின்னர், அவ்ர வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது சமூக வலைதள பக்கத்தில் மூவர்ணக்கொடியை வைத்துள்ளேன். பொதுமக்களும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் டிபி.யாக தேசியக்கொடியை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நமது மூவர்ண கொடியை வடிவமைத்த சுதந்திர போராட்ட வீரர் பிங்காலி வெங்கையாவை, அவரின் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்,’ என கூறியுள்ளார். எம்பி.க்கள் பைக் பேரணி: இந்நிலையில், டெல்லியில் இன்று காலை எம்பி.க்கள் பங்கேற்கும் மூவர்ண பைக் பேரணியை ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்கும்படி அனைத்து கட்சி எம்பி.க்களுக்கும் அது அழைப்பு விடுத்துள்ளது.* 600 கோடி பரிவர்த்தனைகடந்த மாதம் யுபிஐ மூலமாக 600 கோடி பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதை பாராட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `இதுவொரு மிக சிறந்த சாதனை. இது, பொருளாதார சீர்திருத்தம், புதிய தொழில்நுட்பத்தில் மக்கள் ஒன்று சேர ஆர்வம் காட்டி வருவதை காட்டுகிறது,’ என்று கூறியுள்ளார்.