87 வயதிலும் மிதிவண்டி மூலம் அசராமல் உழைக்கும் “விசில் தாத்தா”. “கடைசி வரை நான் யாரை நம்பியும் இருக்க மாட்டேன்; கடைசிவரை சொந்தமா உழைத்துத்தான் வாழ்வேன்” – தன்னம்பிக்கை மிக்க 85 வயது இளைஞர் உதிர்க்கும் வார்த்தைகள் இது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் 87 வயதான முதியவர் பாபு. இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் 1 பெண், 3 பையன்கள் உள்ளனர். தனது பிள்ளைகள் அனைவருக்கும் இவர் திருமணம் செய்து வைத்துள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மிதிவண்டி மூலம் இஞ்சி டீ மற்றும் தின்பண்டங்களை விற்று வருகிறார்.
87 வயதான போதிலும் மற்றவர் யாரையும் நம்பி இருக்காமல் தன்னம்பிக்கையுடன் இன்றளவும் மனபலத்துடன் சுறுசுறுப்பாக உழைத்து வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு எழும் இவர் இஞ்சி டீயை தயார் செய்து தனது மிதிவண்டியில் விற்பனைக்கு தேவையான பொருட்களை அடுக்கிக்கொண்டு மிதிவண்டியைக் காண்போர் வியக்கும் வண்ணம் வேகமாக ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் விற்பனையை மேற்கொள்கிறார்.
இவர் சாலைகளில் மிதிவண்டியை வேகமாக ஓட்டிச்செல்வதை பார்க்கும் பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போகின்றனர். கழுத்தில் எப்போதும் விசிலை மாட்டிக்கொண்டிருக்கும் இவர் சாலையில் போகும்போது விசில் அடித்துக்கொண்டே போவதால் பள்ளி சிறுவர்கள் இவரை செல்லமாக “விசில் தாத்தா” என அன்போடு அழைக்கின்றனர்.
87 வயதிலும் தசைகள் தளர்ந்தாலும், தன்னம்பிக்கை சற்றும் தளராமல், மன உறுதியோடு சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த முதிய இளைஞரின் செயல் பார்க்கும் அனைவராலும் பாராட்டப்படுவதோடு அனைத்து தரப்பினருக்கும் ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM