நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பெண் தாசில்தாருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் ஆக.5ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள கடலடி என்ற கிராமத்தில் உள்ள பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுவை பரீசிலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் முருகன் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதி கேள்வியெழுப்பினார். மேலும் இது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள் தாசில்தார் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப் போவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இரு நாள்களில் நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தனர். எனினும் நீதிபதிகள் தாசில்தார் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய பெண் தாசில்தார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்.
தொடர்ந்து, தண்டனை விவரங்களை ஆக.5ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil